Showing posts with label thirumurugan. Show all posts
Showing posts with label thirumurugan. Show all posts

Saturday, May 7, 2016

திருப்புகழ் - முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல்.


திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

முத்தைத்தரு பத்தித் திருநகை
     அத்திக்கிறை சத்திச் சரவண
          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
     முற்பட்டது கற்பித் திருவரும்
          முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
          பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
          திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
     தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
          சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
     குக்குக்குகு குக்குக் குகுகுகு
          குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
     வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
          குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முத்தைத்தரு பத்தித் திருநகை ... வெண்முத்தை நிகர்த்த, அழகான
பல்வரிசையும் இளநகையும் அமைந்த

அத்திக்கு இறை ... தேவயானை* தேவியின் தலைவனே,

சத்திச் சரவண ... சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே,

முத்திக்கொரு வித்துக் குருபர ... மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு
விதையாக விளங்கும் ஞான குருவே,

எனவோதும் முக்கட்பரமற்கு ... என்று துதிக்கும் முக்கண்ணர்
பரமசிவனார்க்கு

சுருதியின் முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு முதன்மையான
ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து,

இருவரும் ... (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய
இருவரும்,

முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண ... முப்பத்து முக்கோடி
தேவர்களும் அடி பணிய நின்றவனே,

பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத்
தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,

ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக்
கொண்டு பாற்கடலைக் கடைந்து,

ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற்
பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,

பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு,
தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான
நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே ... பரிவோடு
என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ? (இப்பாடலின் பிற்பகுதி
முருகன் அசுரர்களுடன் செய்த போரினை விரிவாக வருணிக்கிறது).

தித்தித்தெய ஒத்தப் பரிபுர ... தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து,
சிலம்புகள் அணிந்த

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டியப் பாதங்களை வைத்து
காளிதேவி

திக்கொட்க நடிக்க ... திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம்
செய்யவும்,

கழுகொடு கழுதாட ... கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,

திக்குப்பரி அட்டப் பயிரவர் ... எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத்
தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்**

சித்ரப்பவுரிக்கு ... இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
எனவோத
 ... 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக'
என்ற தாள ஓசையைக் கூறவும்,

கொத்துப்பறை கொட்ட ... கூட்டமாகப் பற்பல பறை
வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும்,

களமிசை முதுகூகை ... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்

குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென
கொட்புற்றெழ
 ... 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு
'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச்
சுழன்று மேலே எழவும்,

நட்பற்ற அவுணரை ... சினேக எண்ணம் தவிர்த்து விரோத
மனப்பான்மையே கொண்ட அசுரர்களை

வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட ... கொன்று பலி
கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக,

ஒத்துப் பொரவல பெருமாளே. ... தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த,
போர் செய்யவல்ல பெருமாளே.

வீட்டுப்பேற்றை அளிக்கும், வரிசையாகப் பற்களை உடையவளும்,
யானையால் வளர்க்கப்பட்டவளுமாகிய  தேவசேனைக்கு இறைவனே,
சத்தி வேலைத் தாங்கிய சரவணனே, முத்திக்கு ஒரு வித்தே, ஞான
குருவே என்று துதித்து நின்ற, முக்கண் பரமனாகிய சிவ
பெருமானுக்குப் பிரணவப் பொருளைக் கற்பித்தவரே. பிரமன்,
திருமால் ஆகிய இருவரும், முப்பத்து மூன்று தேவர்களும் உனது
திருவடியைப் போற்றி விரும்ப அவுணருடன் போர் செய்தவரே.

இராவணனுடைய பத்துத் தலைகளைச் சிதறும்படி அம்பைச்
செலுத்தியவரும், மந்தர மலையை மத்தாகநட்டு கடலைக் கடைந்த வரும்
பகலைத் தனது சக்கரத்தால் இரவாக்கியவரும்அருச்சனனுடைய தேரைச் ஓட்டியவரும் பச்சை நிறமுடையவரும் ஆகிய  திருமால் மெச்சிய மருகனே. என் மீது அன்பு   வைத்து என்னைக் காத்து  அருளுவதும் ஒரு நாள் ஆகுமோ?தாளத்துக்கு ஒத்தவாறு பதத்தை வைத்துபயிரவி சுழன்று நடிக்கவும் கழுகுகள், பேய்கள் ஆடவும், எட்டுத் திக்குப்  பயிரவர்கள் மண்டலக் கூத்து ஆடவும், பறைகள் முழங்க போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்ஓலமிடவும், அசுரர்களை வெட்டி, கிரௌஞ்ச மலை  பொடி ஆகும்படி போர் செய்த பெருமாளே. என்னைக் காத்தருளுவதும் ஒருநாள் உண்டாகுமோ?


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More